ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

அஸ்மின் அலி நிர்வாகத்திற்குப் பிறகு மாநில அரசின் பொருளாதாரம் மேலும் வலுப்பெற்றது- மந்திரி புசார்

ஷா ஆலம், அக் 17- சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து தலைவர்களும் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்ட காரணத்தினால் கடந்த 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநிலத்தின் பொருளாதாரம் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் பங்களிப்பு கடந்த 2017ஆம் ஆண்டில் 23.2 விழுக்காடாக இருந்த வேளையில் கடந்த 2021ஆம் ஆண்டு தமது தலைமைத்துவத்தில் அந்த எண்ணிக்கை 24.8 விழுக்காடாக அதிகரித்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் பொருளாதாரம் நலிவடைந்து விட்டதாக அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல்துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மந்திரி புசார் இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

அஸ்மின் சிலாங்கூரை விட்டு வெளியேறியது முதல் மாநிலத்தின் நிதி நிலை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது பங்களிப்பும் அதிகரித்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அமிருடின் சொன்னார்.

சிலாங்கூர் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதோடு மக்களுக்கான நலத் திட்டங்களும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அஸ்மின் அலி பதவி விலகியது முதல் மந்திரி புசார் பொறுப்பை வகித்து வரும் அமிருடின் ஷாரி  தெரிவித்தார்.

சிலாங்கூரின் வளர்ச்சிக்கும் சுபிட்சத்திற்கும் தனி நபர் காரணமல்ல. அனைவரின் கூட்டு முயற்சியே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரம் ஏறுமுகமாக உள்ளது அஸ்மினுக்கு வீழ்ச்சி காண்பது போல் தோன்றுகிறது என்று கேலியாக அமிருடின் கூறினார்.


Pengarang :