ECONOMYMEDIA STATEMENT

மனநலம் குன்றிய நபர் கத்தியுடன் வீட்டின் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டம்

மலாக்கா, அக் 18 – பாராங் மற்றும் கத்தியை ஏந்தியவாறு வீட்டின் கூரை மீது நின்று களேபரத்தில் ஈடுபட்ட மனநலம் குன்றிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இங்குள்ள தஞ்சோங் கிளிங், புக்கிட் தெம்பியானில் நேற்று காலை 11.30 மணியளவில்  இச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த 37 வயது சந்தேக நபர் தனது மனைவியின் கண்ணில் குத்தியதோடு தனது குழந்தைகளையும் கடுமையாகத் திட்டியதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

குழந்தைகளை மன்றாட வைப்பதன் மூலம் அவ்வாடவரை சாந்தப்படுத்தி கீழே இறங்க வைப்பது உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சந்தேக நபர் அவற்றைப் புறக்கணித்து கூரையின் மீது மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றபோது அச்சந்தேக நபர் அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார் என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

பிறகு காவல்துறையினர் கூரை மீது ஏறி அவ்வாடவரை கைது செய்ய முயன்ற போது அங்கு கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதனால் கூரையின் ஓடுகள் பெயர்ந்து விழுந்ததாகவும் அவர் சொன்னார்.

கடும் போராட்டத்திற்கு பிறகு சந்தேக நபர் கைவிலங்கிடப்பட்டு பிற்பகல் 1.40 மணியளவில் கீழே கொண்டு வரப்பட்டார் என கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

இதனிடையே, தன் கணவர் ஒரு மனநோயாளி என்றும் பலமுறை மலாக்கா மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றுள்ளார் என்றும் 38 வயதான அவரின் மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மருத்துவமனை வழங்கிய மருந்தை அவர் முறையாக உட்கொள்ள மறுத்த காரணத்தால்  இப்பாதிப்பு ஏற்பட்டதாக அம்மாது தெரிவித்தார்.


Pengarang :