ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

இலவச காப்புறுதி திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஹராப்பான் திட்டம்- மக்கள் வரவேற்பு

ஷா ஆலம், நவ 16- வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் பொது காப்புறுதி திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் அறிவிப்பை சுங்கை பூலோ தொகுதி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

மாநிலத்திலுள்ள சுமார் 60 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் இன்சான் எனப்படும் இந்த இலவச காப்புறுதி திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர  உடல்  செயலிழப்புக்கு 10,000 வெள்ளி வரை இழப்பீடு பெற இந்த காப்புறுதி திட்டம் வழி வகுக்கிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக காப்புறுதி பாதுகாப்பை பெற இயலாதவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் துணை புரியும் என்று தனியார் துறை ஊழியரான ஆய்ஷா ஷாரும் (வயது 31) கூறினார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த இன்சான் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். மாநில அரசின் இந்த திட்டத்தின் மூலம் நானும் பயனாளி ஆகியுள்ளேன் என்று அவர் சொன்னார்.

இது ஒரு சிறப்பான திட்டமாகும். இதில் பதிவு செய்வதும் மிகவும் எளிது. நாடு முழுமைக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் போது இதன் விண்ணப்ப முறையும் எளிதாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் அவர்.

அனைத்து மக்களும் பயன்பெறுவதற்கு ஏதுவாக இத்திட்டத்தை நாட்டு மக்களுக்கு விரிவுபடுத்தும்படி தொழிற்சாலை ஊழியரான ஹைக்கல் அப்துல் ரஹிம் (வயது 26) கூறினார்.

காப்புறுத் பாதுகாப்பு அனைவருக்கும் மிக முக்கியமானதுதான். ஆனாலும், அனைவராலும் இந்த பாதுகாப்பை பெற இயலாது. காப்புறுதி அவசியமானது என்ற போதிலும் இதர அத்தியாவசியத் தேவைகளுக்காக பணத்தை செலவிட வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு உள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :