ECONOMYSELANGOR

சிலாங்கூர் இந்தியர்களுக்கான உதவித் தொகை 33 லட்சமாக உயர்வு

ஷா ஆலம், நவ 29 – சிலாங்கூரில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களுக்கான மானியம் இப்போதைய ஆண்டைக் காட்டிலும் கணிசமாக உயர்வு கண்டுள்ளது.

இவ்வாண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களுக்குப் பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி RM 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை  தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அந்த தொகை RM33 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

எப்போதும் போல் அடுத்த ஆண்டும் மாணவர்களின் பள்ளிப் பேருந்து கட்டணம், உயர்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு உதவி நிதி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு நிதி ஆகியவை எந்தவிதத் தடையின்றி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதேவேளையில், கூடுதலாக ஒதுக்கப்பட்ட இந்த நிதியின் மூலம் மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். மேலும் அடுத்த ஆண்டு மத்திக்குள் பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்படும் என்று கணபதிராவ் கூறினார்.

அதைத் தவிர்த்து, சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு இம்முறை கூடுதல் 20 லட்சம் ஒதுக்கப்பட்டு மொத்தம் 80 லட்சம் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கும் இவ்வாறான மானியங்களை, கையாடல் செய்யாமல், முறையாக நிர்வகித்தால் மேலும் பல உதவிகளை மாநில அரசிடம் இருந்து பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :