ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பி40 தரப்பினர் மத்தியில் தொழில் நிபுணர்களை உருவாக்குவதில் திறன் பயிற்சித் திட்டம் உதவும்- கணபதிராவ்

கிள்ளான், டிச 4- வாகனத் தொழில் துறையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்திற்காக சிஸ்வா சிஸ்வி சமூக நல அமைப்புக்கு சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் (யு.பி.பி.எஸ்.) வாயிலாக மாநில அரசு 19,750 வெள்ளி மானியம் வழங்கியது.

சிலாங்கூர் டானாசிஸ்வா வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக 75 பேர் தொழில் துறைகளில் பயிற்சி பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

சிஸ்வா சிஸ்வி சமூக நல அமைப்பு, யு.பி.பி.எஸ். மற்றும் கார்சம் நிறுவனம்  ஆகிய தரப்பினருடனான இந்த ஒத்துழைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கார் சோதனையாளர்களாக பயிற்சி பெறுவதற்கும் பின்னர் வாகனத் தொழில் துறையில் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்ட இத்திட்டத்தில் பங்கு கொள்வோர் கார்சம் அகாடமியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பயிற்சியைப் பெறும் வாய்ப்பினைப் பெறுவர். பின்னர் அவர்களுக்கு மூன்றாம் நிலைக்கான சான்றிதழ் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பயிற்சியை முடித்தவர்களுக்கு கார்சம் நிறுவனத்தில் முழு நேர பணியாளர்களாக சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அவர்  மேலும் கூறினார். 


Pengarang :