ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

கெந்திங் நிலச்சரிவு- 37 பேர் மீட்பு, தேடுதல் நடவடிக்கை தீவிரம்

கோலாலம்பூர், டிச 16- கெந்திங் ஹைலண்ட்ஸ் கோதோங் ஜெயாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டவர்களில் 37 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

கோதோங் ஜெயா, ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் இயற்கை விவசாய பண்ணைக்கு அருகே உள்ள தற்காலிக கூடாரங்கள் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராசாம் காமீஸ் கூறினார்.

இந்த நிலச்சரிவு குறித்து அதிகாலை 2.24 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து 3.00 மணியளவில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து  கோல குபு பாரு, செந்தோசா, ரவாங், கெந்திங் ஹைலண்ட்ஸ், அம்பாங், பாண்டான், கோத்தா அங்கிரிக் மற்றும் அண்டலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த குழுவினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றார் அவர்.

அந்த இயற்கை விவசாயப் பண்ணைக்கு அருகே சுமார் 30 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சாலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை நிர்மூலமாக்கியதாக அவர் சொன்னார்.

அந்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த சுமார் 100 பேர் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Pengarang :