ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“பைக் கேர்-1000“  திட்டத்தின் வழி 100 பேருக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள்-கணபதி ராவ் தகவல்

ஷா ஆலம், டிச 24- சிலாங்கூர் அரசின் “பைக் கேர்-1,000“ திட்டத்தின் மூலம் உணவு விநியோகிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள 100 பேருக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.

“கிக்“ எனப்படும் மோட்டார் சைக்கிள் மூலம் உணவு விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு 1,000 வெள்ளி வழங்கப்படும். மோட்டார் சைக்கிளுக்கான முன்பணம், காப்புறுதி மற்றும் கடன் பரிசீலனை கட்டணம் ஆகியவற்றை இந்த உதவித் தொகை உள்ளடக்கியிருக்கும் என்று அவர் சொன்னார்.

இது தவிர்த்து, பழைய மற்றும் பழுதான மோட்டார் சைக்கிள்களை மாற்றுவதற்கு விரும்பும் உணவு விநியோகிப்பாளர் களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் “பைக் கேர்-1,000“ திட்டத்தை தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மானிய விலை மோட்டார் சைக்கிள் திட்டத்திற்கு 340 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக அந்த விண்ணப்பங்கள் கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன என்றார் அவர்.

வேலையில்லாப் பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு இந்த திட்டம்  தற்காலிக வருமானத்திற்கான புகலிடமாக விளங்குகிறது.

ஆகவே, இந்த திட்ட பைகேர் திட்டம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல பலனையும் அவர்கள் வருமானம் ஈட்டுவதற்குரிய வாய்ப்பினையும் வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :