ALAM SEKITAR & CUACAECONOMY

தலைநகரில் புத்தாண்டு சாலைத் தடுப்புச் சோதனை- 372 பேருக்கு சம்மன், 10 வாகனங்கள் பறிமுதல்

கோலாலம்பூர், ஜன 1- கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை போலீசார் 2023 புத்தாண்டை முன்னிட்டு தலைநகர் முழுவதும் 26 சாலைத் தடுப்பு  நேற்றிரவு மேற்கொண்டனர்.

இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 372 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதோடு 10 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகரின்  அனைத்து  இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பு நடவடிக்கைகளில்  மொத்தம்  841 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக கோலாலம்பூர் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ யஹாயா ஓத்மான் கூறினார்.

 இந் சோதனையில் மிக அதிகமாக  619 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன, அதைத் தொடர்ந்து கார்கள் (171), வேன்கள் (19) மற்றும் ஜீப்கள் (32) மீதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 மேலும், இந்நடவடிக்கையில் மொத்தம் 848 நபர்கள் சோதனை செய்யப்பட்டதோடு கட்டமைப்பை மாற்றியமைத்ததற்காக 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

பொறுப்பற்ற முறையிலும் ஆபத்தான வகையிலும் வாகனத்தை செலுத்தி குற்றத்திற்காக 15 முதல் 21 வயதுக்குட்பட்ட 12  பேர்  1987ஆம்  ஆண்டு  சாலை போக்குவரத்து சட்டத்தின் 42வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர் என்றார் அவர்.

தலைநகர், ஜாலான் லோக் இயூவில் மேற்கொள்ளப்பட்ட புத்தாண்டு சிறப்பு சாலைத் தடுப்பு நடவடிக்கையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த  சிறப்பு நடவடிக்கையில்  காவல் துறையின் 30  அதிகாரிகள் மற்றும் 200 உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Pengarang :