ECONOMYNATIONALPBT

முந்தைய அரசாங்கம் போல் அடக்குமுறை, அரசியல் பழிவாங்கல் இனி இருக்காது- அன்வார் வாக்குறுதி

ஷா ஆலம், ஜன 6- தனது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் பழிவாங்கும் அரசியல் கொள்கையை அமல்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஊழல் தொடர்பான விசாரணையில் வழக்குகளை மூடவோ அல்லது ஒரு சார்பாக செயல்படவோ கூறும் எந்த உத்தரவையும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அரசாங்கம் பிறப்பித்ததும் கிடையாது என்பதோடு விசாரணையில் தலையிட்டதும் கிடையாது என்று அவர் சொன்னார்.

விசாரணைகளைத் தொடர்வதற்கான சில நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதனால் பயந்து போன சிலர் அரசியல் பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். உண்மையில் நான் இதில் தலையிடுவதே கிடையாது என்றார் அவர்.

நாம் எதையும் செய்யவில்லை என்றால், நாம் நிர்வாகத்தை சரியாக நடத்தவில்லை என்றும் பெரிய ஊழல் வழக்குகளை மூடி மறைப்பதாகவும் கூறுவார்கள். நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சில தரப்பினருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் ஆயுதம் என்பார்கள் என அவர் சொன்னார்.

நேற்றிரவு ஆர்.டி.எம்.மில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிரதமருடனான சிறப்பு நேர்காணல் நிகழ்வில் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊழல் அல்லது குற்றச் செயல்கள் தொடர்பான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் அதனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எங்களுக்கு வழங்கி உதவலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

முந்தைய அரசாங்கத்தில் நிகழ்ந்தது போல் கொடுங்கோன்மை நிர்வாகம் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஒருபோதும் நிகழாது என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.

கொடுங்கோன்மை என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். அந்த மாதிரி நடந்து கொள்ள நான் விரும்பவில்லை. ஆதாரமின்றி அதிகாரத்தை பயன்படுத்துவது சிறந்த தலைவருக்கு அழகல்ல என நான் கருதுகிறேன் என்றார் அவர்.


Pengarang :