ECONOMYMEDIA STATEMENTPBT

அந்நிய நாட்டினருக்கு இனி இலவச பஸ் சேவை கிடையாது- பெ.ஜெயா டத்தோ பண்டார் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜன 12- பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில்  மாநில அரசின் இலவச பஸ் சேவையைப் பயன்படுத்தும் அந்நிய நாட்டினர் இனி  90 காசு கட்டணம் செலுத்த வேண்டும்.

மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த கட்டண அமலாக்கம் நடைமுறைப் படுத்தப் படுவதாக  பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர் கூறினார்.

உள்நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த இலவச பஸ் சேவையை நாங்கள் தொடக்கினோம். எனினும், இந்த சேவையை வெளிநாட்டினரே அதிகம் பயன்படுத்துவதால் அதற்கான கட்டணத்தை அவர்கள் அவசியம் செலுத்தியாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டண விதிப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து சில தரப்பினர் தொடக்கத்தில் நிச்சயம் குரல் எழுப்புவர். இருந்தாலும் நாங்கள் நிச்சயம் அந்நிய நாட்டினருக்கு கட்டணம் விதிப்போம் என்றார் அவர்.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு இங்குள்ள தாமான் செந்தோசாவில் 60 வசதி குறைந்த குடும்பங்களுக்கு தலா 250 வெள்ளி உதவித்  தொகையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் 60 பஸ்கள் இலவச சேவையை மேற்கொண்டு வருவதாகவும் இந்த சேவையை நடத்த ஆண்டுக்கு 60 லட்சம் வெள்ளி வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

அந்நிய நாட்டினருக்கு கட்டணம் விதிக்கும் பட்சத்தில் இலவச பஸ் சேவைக்கு உண்டாகும் செலவினத்தை ஓரளவு குறைக்க முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :