கெர்லிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத்தில் திரளானோர் பங்கேற்பு- மாநில அரசு சார்பில் ஆலயத்திற்கு வெ.20,000 மானியம்

கெர்லிங், பிப் 6- சிலாங்கூரில் தைப்பூச விழாவுக்கு பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கெர்லிங், ஸ்ரீ சுப்பிரணியர் ஆலயத்தில் தைப்பூச விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து முருகப் பெருமானுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் சார்பில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கலந்து கொண்டார்.

மாநில அரசின் மானியமாக 20,000 வெள்ளிக்கான காசோலையை ஆலயத் தலைவர் பால கிருஷ்ணனிடம் பாப்பா ராய்டு இந்த நிகழ்ச்சியின் போது ஒப்படைத்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், மாநிலத்திலுள்ள 57 ஆலயங்களுக்கு 18 லட்சம் வெள்ளியை மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

மாநிலத்திலுள்ள அனைத்து சமூகங்களின் நலனிலும் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளதை இது புலப்படுத்துகிறது. ஆலயங்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வரும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் ஆகியோருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறப்பு கலை நிகழ்ச்சியில் மண்ணின் மைந்தர்களின் படைப்புகளும் அதிர்ஷ்டக் குழுக்கு  அங்கமும் இடம் பெற்றது. தைப்பூச விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மாநில அரசின் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது.


Pengarang :