NATIONAL

லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவ ஆய்வகப் பணியாளர் கைது

ஜொகூர் பாரு, பிப் 8- லஞ்சம் பெற்றது தொடர்பான புகாரின் பேரில் மருத்துவ ஆய்வகத்தின் பணியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையைத்தின் ஜொகூர் மாநிலக் கிளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சுமார் 20,000 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில் நேற்று காலை 8.30 மணிக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக ஜொகூர் பாரு எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு வந்த 51 வயது பணியாளர்  விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாக வட்டாரங்கள் கூறின.

அரசாங்க மருத்துவமனையின் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றும் அந்நபர் கடந்த 2018 முதல் இதுவரை போதைப் பொருளின் அளவைக் கண்டறிவதற்காகச் சிறுநீர் மாதிரிகளைக் கொடுப்பவர்களிடம் லஞ்சம் பெற்றதாக அறியப்படுகிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் சிறு நீர் மாதிரியின் முடிவை மாற்றுவதற்குக் கைமாறாக இந்த லஞ்சப் பணம் வழங்கப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

இதனிடையே, ஜொகூர் மாநில எஸ்.பி.ஆர்.எம். இயக்குநரைத் தொடர்பு கொண்ட போது இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். அவ்வாடவருக்கு எதிராக 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :