சாலைகளில் 600 சோலார் விளக்குகளைப் பொருத்த மாநில அரசு வெ.50 லட்சம் ஒதுக்கீடு

 அம்பாங், பிப் 12- சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசு 50 லட்சம் வெள்ளி செலவில் சோலார் விளக்குகளைப் பொருத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த சோலார் தெரு விளக்குகளைப் பொருத்தும் முதல் கட்டத் திட்டம் 31 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முற்றுப் பெற்றதாக அவர் சொன்னார்.

இந்த கட்டப் பணியின் போது பண்டான் இண்டா, சுங்கை ராமால், புக்கிட் மெலாவத்தி , செலாட் கிள்ளான் உள்ளிட்ட தொகுதிகளில் 300 விளக்குகள் பொருத்தப்பட்டன. சிலாங்கூர் மாநில கொடியை பிரதிபலிக்கும் வகையில்  இந்த விளக்கு கம்பங்களுக்கு சிவப்பு, மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த சாலை விளக்குத் திட்டத்தை பொது மக்கள் வரவேற்றுள்ளதோடு விளக்குகள் பிரகாசமான ஒளியை தருவதாகவும் கூறியுள்ளனர். இதன் இரண்டாம் கட்டப் பணி வரும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடையும் என அவர் மேலும் கூறினார்.

நேற்று இங்குள்ள பெர்வீரா ஜெயாவில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் மண்டபத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

அதிகமான மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் இந்த விளக்குகளைப் பொருத்துவதற்கு பொருத்தமான இடங்களை அடையாளம் காணும்படி சட்டமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த சோலார் விளக்குகளைப் பொருத்துவதில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கவனம் செலுத்தாத சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 8,000 வெள்ளி மதிப்புள்ள 10 சாலை விளக்கு கம்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த கம்பங்களை பொருத்த வேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்றார் அவர். 


Pengarang :