ECONOMY

ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிய இலவச பரிசோனைத் திட்டத்தில் பங்கேற்பீர்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், பிப் 16- இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் சிலாங்கூர்வாசிகள் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த இலவச மருத்துவப் பரிசோதனையில் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சைக்கு 3,000 வெள்ளி வரை செலவுத் தொகை ஏற்றுக் கொள்ளப்படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனை, பெருங்குடல், புரோஸ்டெட், மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பார்வைக் குறைபாடு, குளுகோமா, விழிப்படலம் போன்ற கண் மற்றும் பல், காது சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனையோடு பிஸியோதெராபி சேவையும் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் பங்கேற்போர் செலங்கா செயலி வாயிலாக சமர்ப்பிக்கும் பாரங்களில் உள்ள தகவல்களைக் கொண்டு செய்யப்படும் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் விளக்கினார்.

சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் இம்முறை காது, பல் பரிசோதனைகளோடு பிஸியோதெராபி சேவையும் இம்முறை வழங்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்கு 26 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக மாநிலத்திள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 31,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :