NATIONAL

இருவழி ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா- எகிப்து இணக்கம்

கோலாலம்பூர், பிப் 28- இரு வழி உறவுகளை வலுப்படுத்தும் அதே வேளையில் புதிய துறைகளில் கூட்டாக வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் மலேசியாவும் எகிப்தும் இணக்கம் கண்டுள்ளன.

எகிப்திய அதிபர் அப்டில் ஃபாத்தா அல்-சிசியுடன் நேற்று காணொளி வாயிலாக நடத்தப்பட்ட சந்திப்பின்போது கல்வி, பொருளதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருவழி உறவுகளை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை தாங்கள் வலியுறுத்தியதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இது தவிர, விவேக உருவாக்கம் மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் போன்ற புதிய துறைகளில் உள்ள வாய்ப்புகளைக் கூட்டாகக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

மேலும், உணவு உத்தரவாதம், எரிசக்தி பற்றாக்குறை, இஸ்லமோபியா, பாலஸ்தீன மக்களின் போராட்டம் உள்ளிட்ட உலக விவகாரங்களும் இந்த பேச்சு வார்த்தையில் இடம் பெற்றன என்று அவர் தனது டிவிட்ட்டர் பதிவில் தெரிவித்தார்.

மலேசியாக்கும் எகிப்துக்கும் இடையிலான வலுவான பொருளாதார ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக எகிப்து விளங்குகிறது. அதே சமயம், ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அதிக அளவில் செம்பனை எண்ணெய்யை இயக்குமதி செய்யும் நாடாகவும் அது திகழ்கிறது என்றார் அவர்.


Pengarang :