ANTARABANGSAECONOMYSELANGOR

சைபர்ஜெயா மருத்துவமனையின் வழி 282,000 பேர் மருத்துவச் சேவையைப் பெற வாய்ப்பு

சிப்பாங், மார்ச் 8- சைபர்ஜெயாவில் கடந்தாண்டு நவம்பர் 11ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் சைபர்ஜெயா மருத்துவமனையின் வாயிலாக சிப்பாங் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 282,000 பேர் மருத்துவச் சேவையைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

சுமார் 12.8 ஏக்கர் நிலப்பரப்பில் 50 கோடியே 88 லட்சம் வெள்ளி செலவில்  நிர்மாணிக்கப்பட்ட இந்த மருத்துவமனை 288 கட்டில்களைக் கொண்டுள்ளதோடு 14 நிபுணத்துவச் சேவைகள் கட்டங் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர்  டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

சைபர்ஜெயா மருத்துவனையின் திறப்பு விழாவை முன்னிட்டு வழங்கிய உரையில் அவர் இதனைக் கூறினார். டாக்டர் ஜலிஹாவின் உரையை துணையமைச்சர் லுகானிஸ்மேன் அவாங் சௌனி வாசித்தார்.

இந்த மருத்துவமனை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ,) மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2 (கே.எல்.ஐ.ஏ.2) ஆகிய விமான நிலையங்களில் பேரிடர் ஏற்படும் பட்சத்தில் முதலில் மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சைபர்ஜெயா மருத்துவமனை அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமே இதற்கு காரணம். அதே சமயம் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்துள்ள சிப்பாங் அனைத்துலக கார் பந்தயத் தடம் (எஸ்.ஐ.சி.) மற்றும் சைபர் ஜெயா சிலிகான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதி மக்களுக்கு இந்த மருத்துவமனை சேவையை வழங்குகிறது என்றார் அவர்.

தற்போதைய தேவையை ஈடு செய்ய எம்.ஆர்.ஐ. எனப்படும் காந்த அதிர்வு இமேஜிங் இயந்திரத்தை இம்மருத்துவமனைக்கு வழங்குவதன் அவசியத்தை சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது என்றார் அவர்.

 


Pengarang :