ALAM SEKITAR & CUACAECONOMY

சிலாங்கூர் நிவாரணக் குழுவினர் வெள்ளம் பாதித்த 500 வீடுகளில் குப்பைகளை அகற்றினர்

லாபிஸ், மார்ச் 10- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தின் லாபிஸ் நகரில் இரண்டாவது நாளாக துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் சிலாங்கூர் மாநில நிவாரணக் குழுவினர் சுமார் 500 வீடுகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றினர்.

இந்நகரின் ஒன்பது பகுதிகளில் வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் பணியை ஊராட்சி மன்றங்கள், செர்வ் தன்னார்வலர்கள், டீம் சிலாங்கூர், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் ஆகிய அமைப்புகள்ச் சேர்ந்த 291 உறுப்பினர்கள் செவ்வனே மேற்கொண்டு வருவதாக மனுக்குல மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

நேற்று காலை 10.00 மணிக்குத் தொடங்கிய இந்த துப்புரவுப் பணி சீராக நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் அவர்கள் மேற்கொண்ட கடும் உழைப்புக்கு உரிய பலன் கிடைத்துள்ளது என்றார் அவர்.

இந்த துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் நான் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது பணி இலக்கு முடியும் வரை அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கடமையைத் தீவிரமாக ஆற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கம்போங் ஜாவா பாருவில் தன்னார்வலர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்கள் பகுதியில் துப்புரவுப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் நோக்கில் இங்கு வந்துள்ள சிலாங்கூர் நிவாரணக் குழுவினருக்கு வட்டார மக்கள் நல்ல ஆதரவை வழங்கி வருவதாகவும் அவர் முகமது கைருடின் சொன்னார்.

 


Pengarang :