ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அதிகாரத் துஷ்பிரயோகம், கையூட்டு தொடர்பில் மொகிடின் மீது ஆறு குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர், மார்ச் 10- முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு எதிராக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் கையூட்டு பெற்றது தொடர்பில் ஆறு குற்றச்சாட்டுகள் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டன.

 பெர்சத்து கட்சிக்கு கையூட்டாக 23 கோடியே 25 லட்சம் வெள்ளியைக் கையூட்டாகப் பெறுவதற்கு பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளையும் சட்டவிரோத நடவடிக்கை வாயிலாக 19 கோடியே 50 லட்சம் வெள்ளி பெற்றது தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளையும் பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர் எதிர்நோக்கியுள்ளார்.

நீதிபதி அஸூரான அல்வி முன்னிலையில் தமக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 75 வயதான மொகிடின் மறுத்து விசாரணை கோரினார்.

நான் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. விசாரணை நடத்தக் கோருகிறேன் என்று நீதிபதியிடம் அவர் தெரிவித்தார்.

பிரதமர் என்ற முறையிலும் பெர்சத்து கட்சியின் தலைவர் என்ற முறையிலும் தனது பதவியைப் பயன்படுத்தி புக்ஹாரி இக்குய்ட்டி சென். பெர்ஹாட் நிறுவனத்திடம் 20 கோடி வெள்ளியும் நெப்டுரிஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து 10 லட்சம் வெள்ளியும் பெர்சத்து கட்சிக்காக பெற்றதாக முதல் இரு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.

பிரதமர் மற்றும் பெர்சத்து கட்சித் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 1 கோடியே 95 லட்சம் வெள்ளியை மம்ஃபோர் சென். பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்தும் 1 கோடியே 20 லட்சம் வெள்ளியை அஸ்மான் யூசுப் என்பவரிடமிருந்து கட்சிக்காக பெற்றதாக மூன்றாவது மற்றும் நான்காவது குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

இக்குற்றங்களை கடந்த 2020 மார்ச் 1 முதல் 2021 ஆகஸ்டு 20 வரை புத்ரா ஜெயாவிலுள்ள புளோக் உத்தாமா, பங்குனான் பெர்டானா புத்ரா, கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :