ECONOMYMEDIA STATEMENT

இ.பி.எஃப்.-சொக்சோ இணைப்புக்கு சாத்தியமில்லை- மலேசிய முதலாளிகள் சம்மேளனம் கருத்து

கோலாலம்பூர், மார்ச் 12– ஊழியர் சேமநிதி வாரியம் (இ.பி.எஃப்.) மற்றும் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவன இணைப்பு சாத்தியமற்ற ஒன்று என மலேசிய முதலாளிகள் சம்மேளனம் கூறியுள்ளது.

இ.பி.எஃப். மற்றும் சொக்சோ ஆகிய அமைப்புகள் இரு வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டவை என்று அச்சம்மேளனம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இ.பி.எஃப். 1991ஆம் ஆண்டு ஊழியர் சேமநிதி மூலம் உருவாக்கப்பட்டது. அதே சமயம், சொக்சோ 1969ஆம் ஆண்டு தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2017ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு காப்புறுதி அமைப்பினால் உருவாக்கப்பட்டது என்று அது கூறியது.

இந்த பரிந்துரையை சட்டரீதியாக  அமல்படுத்துவதாக இருந்தால் அவ்விரு அமைப்புகளின் சட்டங்கள் திருத்தப்பட்டு முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும். மேலும் சட்டங்களைத் திருத்துவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும். இதை விட அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் நிறைய உள்ளன என்று அந்த சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் சைட் ஹூசேன் சைட் ஓஸ்மான் கூறினார்.

மலேசியாவில் மூத்த குடிமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அவ்விரு அமைப்புகளையும் ஒன்றிணைப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதாக அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது.

இவ்விரு அமைப்புகளையும் ஒன்றிணைப்பது நடப்பு நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதோடு ஒன்றின் செயல்பாடுகளில் மற்றொன்று தலையிடும் சூழலும் ஏற்படும் என்று சைட் ஹூசேன் தெரிவித்தார்.


Pengarang :