ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACA

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூருக்கு தன்னார்வலர்களை அனுப்ப சிலாங்கூர் தயார்

ஷா ஆலம், மார்ச் 18- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் கித்தா சிலாங்கூர் பென்யாயாங் தன்னார்வலர் குழுவை அனுப்ப மாநில அரசு தயாராக உள்ளது.

எனினும், தேவையின் அடிப்படையில் இந்த உதவிப் பயணம் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேவையைப் பொறுத்து நாம் உடனடியாக களத்தில் இறங்குவோம். நமது தன்னார்வலர்கள் அண்மையில்தான் அங்கிருந்து திரும்பினர். மேலும் அவர்கள் ரமலான் பெருநாளைக் கொண்டாட வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட உதவிப் பயணத்தின் போது 1,084 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. தேவை ஏற்பட்டால் இரண்டாம், மூன்றாம் கட்டப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று மாநில சட்டமன்ற எனெக்ஸ் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரி புசாரை தாம் தொடர்பு கொண்டு ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் உதவும்படி கேட்டுக் கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் கூறியிருந்தார். 

சிலாங்கூர் மாநில அரசின் முதல் கட்ட உதவிக் குழுவினர் கடந்த மார்ச் 4ஆம் தேதி சிகாமாட் பகுதிக்கு பயணம் மேற்கொண்டு உணவு பொருள்கள், துப்புரவு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினர்.

இரு தினங்களுக்குப் பின்னர் அம்மாநிலத்திற்கு வருகை மேற்கொண்ட  300 தன்னார்வலர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட உதவிக் குழுவினர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பாதிக்கப்பட்ட வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.


Pengarang :