ECONOMYMEDIA STATEMENT

தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அதிகார வரம்பு வலுப்படுத்தப்படும்- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், மார்ச் 18- இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினருக்கு  வேலை   வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் (யு.பி.பி.எஸ்.) அதிகார வரம்பு வலுப்படுத்தப்படும்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக மாநில தொழிலாளர் ஆலோசக மன்றத்தை அமைக்க வேண்டிய நிர்பந்தம் தற்போதைக்கு எழவில்லை என்று பரிவு அரசாங்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்நோக்கத்திற்காக யு.பி.பி.எஸ். பிரிவை வலுப்படுத்தினால் போதுமானது. எனினும் கால மாற்றத்திற்கேற்ப இவ்விவகாரத்தை தொடர்ந்தாற்போல் மறுபரிசீலனை செய்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்கள் மறுபடியும் வேலை வாய்ப்பினைப் பெறுவதில் உதவும் நோக்கில் மாநில அரசு கடந்த 2021ஆம் ஆண்டு இந்த யு.பி.பி.எஸ். பிரிவைத் தோற்றுவித்தது.

இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினர் வேலை வாய்ப்பினை பெறுவதில் உதவுவதற்காக ஆள்பல இலாகா உள்ளிட்ட துறைகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தாங்கள் தயாராக உள்ளதாக கணபதிராவ் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :