ECONOMYMEDIA STATEMENT

முன்னாள் அமைச்சர் அனுவார் மூசாவுக்கு கையூட்டு – நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 5- முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவுக்கு கையூட்டு வழங்கியதாக ஹைட்ரோஷோப்பி சென். பெர்ஹாட் நிறுவன இயக்குநர் டத்தோ அப்துல் ஹமிட் ஷேக் அப்துல் ரசாக்கிற்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கே.எல். டவர் குத்தகையைப் பெறுவதில் உதவுவதற்காக முன்னாள் தொடர்பு மற்றும் பல்லுடகத் துறை அமைச்சரான அனுவாருக்கு மாதம் 5 லட்சம் வெள்ளி வீதம் 15 ஆண்டுகளுக்கு வழங்கியதாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தமக்கெதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 49 வயதான அப்துல் ஹமிட் மறுத்து விசாரணை கோரினார். கே.எல். டவர் குத்தகையை பெறும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்காக டான்ஸ்ரீ லாய் (வயது 60) என்பவர் மூலம் இந்த தொகையை அனுவாருக்கு வழங்கியதாக அப்துல் ஹமிட் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

புத்ரா ஜெயாவிலுள்ள தொடர்பு மற்றும் பல்லுடக அமைச்சின் அலுவலகத்தில் கடந்த 2022 ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரையிலானச் சிறை மற்றும் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது லஞ்சத் தொகையில் ஐந்து மடங்கு தொகையை அபராதம் விதிக்க வகை செய்யும் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 16(6)(பி) பிரிவு மற்றும் அதே பிரிவின் கீழ் தண்டனை விதிக்க செய்யும் பிரிவு 24(1)இல் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

 


Pengarang :