HEALTHNATIONAL

தென்கிழக்காசியாவில் ஒரு மாதத்தில் 481 விழுக்காடு கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு 

மாஸ்கோ, ஏப் 14- தென்கிழக்காசியா மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலத்தில் 481 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

எனினும், உலகலாவிய நிலையில் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.

பிராந்திய அளவில் பார்க்கையில் கடந்த 28 நாட்களில் நான்கு வட்டாரங்கள் குறைவான கோவிட்-19 பாதிப்பை பதிவு செய்துள்ளன என்று அந்த சுகாதார நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கை தெரிவித்தது.

ஆப்பிரிக்கா 45 விழுக்காட்டு வீழ்ச்சியையும் மேற்கு பசிபிக் 39 விழுக்காட்டு வீழ்ச்சியையும் அமெரிக்கா 33 விழுக்காட்டு வீழ்ச்சியையும் ஐரோப்பா 22 விழுக்காட்டு வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அதே சமயம் தென்கிழக்காசியாவில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 481 விழுக்காடு  அதிகரித்துள்ள வேளையில் மத்திய தரைக்கடல் பகுதியில் 144 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது என அந்த அறிக்கை கூறியது.

நேப்பாளத்தில் மிக அதிகமாக 1,198  விழுக்காட்டு கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்தியாவில் 937 விழுக்காட்டு சம்பவங்கள் அதிகரிப்பைக் கண்டுள்ளன. மாலத் தீவில் இந்த எண்ணிக்கை உயர்வு 614 விழுக்காடாக உள்ளது.

கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 9 வரையிலான 28 நாட்களில் 30 லட்சம் பேர்  கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளான வேளையில் 23,000 பேர் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :