ECONOMYNATIONAL

சமநிலை உணர்வை மேம்படுத்துவோம், மாநில-மத்திய அரசின் உறவுகளை பலப்படுத்துவோம்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஏப் 23- சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சுபிட்சத்திற்காக சமநிலைப் போக்கை மேம்படுத்தும்படி மாநில மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசு பணியாளர்களுக்கும் நோன்புப் பெருநாள் உதவித்தொகை வழங்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்தை உதாரணம் காட்டிய அவர், இத்தகைய நடவடிக்கை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி மக்களுக்கான சேவையை மேலும் ஆக்ககரமான முறையில் மேல் கொள்வதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்று சொன்னார்.

சிலாங்கூர் அரசின் வரலாற்றில் முதன் முறையாக மாநிலத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் உதவித் தொகை  வழங்கப்பட்டுள்ளது. இந்த நோன்பு பெருநாளின் போது மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 200 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டது என்றார் அவர்.

நாம் வெளிப்படுத்தும் இந்த சமநிலைப் போக்கு மாநில மற்றும் மத்திய அரசு உறவை மேலும் வலுப்படுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் மாநில மக்கள் மேலும் பலன் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும் என அவர் குறிப்பிட்டார்.

தனது பேஸ்புக் பக்கம் வாயிலாக வழங்கிய நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறினார்.

நட்புறவை வளர்ப்பதற்கு ஏதுவாக நோன்புப் பெருநாளின் போது அண்டை அயலார் வீடுகளுக்கு வருகை புரிவதை வழக்கமாக கொள்ளும்படியும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :