ECONOMYMEDIA STATEMENT

500 வெள்ளிக்கு வாடகைக்குப் பெறும் வங்கிக் கணக்கின் வழி கள்ளப் பணத்தை கைமாற்றும் மோசடிக் கும்பல்

புத்ராஜெயா, ஏப் 23- ஸ்கேம் எனப்படும் இணைய மோசடி நடவடிக்கை அண்மைய காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த குற்றச் செயல் காரணமாக ஏற்படும் இழப்பு பல கோடி வெள்ளியை எட்டியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் 85 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 25,000 இணைய மோசடிச் சம்பவங்கள் பதிவாகின.

இந்த மோசடி அதிகமாக நிகழ்வதற்கு “கழுதை கணக்கு“ எனப்படும் பிறரின் வங்கிக் கணக்கை வாடகைக்கு பெறுவது முக்கிய காரணமாக விளங்குகிறது என்று தேசிய நிதிக் குற்றச் செயல் தடுப்பு மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.

பிறரிடமிருந்து 500 வெள்ளிக்கு வாங்கும் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த மோசடி காரணமாக பல கோடி வெள்ளி இழப்பு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

மோசடிக் கும்பலால் ஏமாற்றப்படும் பணம் இத்தகைய வாடகை வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் மேலும் பல வாடகை வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு பிறகு மீட்கப்படுகிறது. இதனால் மோசடிக் கும்பலை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது என்று அவர் சொன்னார்.

வங்கிக் கணக்கை வாடகைக்கு விடுவோர் தங்களின் ஏ.டி.எம் அட்டை மற்றும் அதன் சங்கேத எண் ஆகியவற்றை மோசடி கும்பலிடம் வழங்குகின்றனர். பொது மக்களிடம் ஏமாற்றும் பணத்தை பரிமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு மோசடிக் கும்பல் இந்த வங்கிக் கணக்கை பயன்படுத்துகிறது என்றார் அவர்.

தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, சமூக ஊடக மோசடி மற்றும் பயனீட்டாளர் தகவல் கசிவு போன்றவையும் இத்தகைய மோசடி சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணமாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :