ECONOMYMEDIA STATEMENT

6,000 சிலாங்கூர் கூ இடாமான் வீடுகள் இன்னும் ஈராண்டுகளில் பூர்த்தியாகும்

ஷா ஆலம், ஏப் 28- சிலாங்கூரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 6,000 சிலாங்கூர் கூ இடாமான் வகை வீடுகள் வரும் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் முற்றுப் பெறும்.

புக்கிட் ஜெலுத்தோங் (ஷா ஆலம்), பண்டார் சௌஜானா புத்ரா (கோல லங்காட்), சைபர் சவுத் (டிங்கில்), புஞ்சா ஆலம் (கோல சிலாங்கூர்), தாமான் ஆயர் மானிஸ் (சபாக் பெர்ணம்) ஆகிய இடங்களில் இந்த கட்டுபடி விலை வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பி.என்.எ.ஸ்.பி.) தலைமைச் செயல்முறை அதிகாரி ராஜா அகமது ஷாரிர் இஸ்கந்தர் ராஜா சலிம் கூறினார்.

கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிப்பதில் பி.என்.எஸ்.பி. ஒரு உந்து சக்தியாக விளங்கி வருகிறது. செமினி ட்ரோப்பிகானா ஹைட்ஸ் பகுதியில் 2,500 வீடுகளை உள்ளடக்கிய திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

ஆறாயிரம் வீடுகளை உள்ளடக்கிய மேலும் சில திட்டங்கள் வெகு விரைவில் பூர்த்தியாகவுள்ளன என்று பி.என்.எஸ்.பி. ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய வீடுகளுக்கு பொது மக்கள் மத்தியில் குறிப்பாக முதல் வீடு வாங்குவோர் மற்றும் புதிதாக திருமணம் புரிந்தவர்களிடையே அமோக ஆதரவு கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.

விண்ணப்பங்களை நன்கு ஆராய்ந்து தகுதி உள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம்.  இது முதல் வீடாகவும் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் மாதம் 10,000 வெள்ளிக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றார் அவர்.


Pengarang :