ACTIVITIES AND ADSHEALTH

ரவாங் தொகுதியில் 30 சுகாதார உதவித் திட்ட விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம்

ஷா ஆலம், ஏப் 28- ரவாங் சட்டமன்றத் தொகுதியில் சிலாங்கூர் சேஹாட் உதவித் திட்டத்திற்கு (பி.எஸ்.எஸ்.) செய்யப்பட்ட 60 விண்ணப்பங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையிலுள்ளவர்களிடமிருந்து அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கபெற்றதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

இந்த விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் தேவையின் அவசியம், சிகிச்சைக்கான செலவினம் மற்றும் இத்திட்டத்திற்கு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

புற்று நோய் உள்பட கடும் நோயினால் பாதிக்கப்பட்ட மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் ரவாங் வட்டார மக்கள் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில மக்களின் நலனுக்காக இந்த பி.எஸ்.எஸ். திட்டம் தவிர்த்து மேலும் பல திட்டங்களையும் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது என அவர் சொன்னார்.

மருத்துவச் சிகிச்சைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் இந்த பி.எஸ்.எஸ். திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது என அவர் சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள், கண்விழிப்படல அறுவை சிகிச்சை, செயற்கை கால், சிறு அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.


Pengarang :