ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் அரங்கின் கட்டுமானச் செலவுக்கு ஈடாக மேம்பாட்டாளருக்கு 10 நிலங்கள்- மாநில அரசு வழங்கும்

சபாக் பெர்ணம், மே 13- ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானத்திற்கு உண்டாகும் செலவை ஈடுகட்டும் விதமாக அதன் மேம்பாட்டாளருக்கு வழங்கவுள்ள பத்து நிலங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

அந்த விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானச் செலவை ஈடுசெய்யும் வகையில் அந்த நிலங்களின் மதிப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நில பரிமாற்றத் திட்டம் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும். இதற்கான பரிந்துரையை தாங்கள் வழங்கி விட்ட நிலையில் அதனை இறுதி செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உலு சிலாங்கூர் மற்றும் கிள்ளான் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அந்த நிலங்களை மதிப்பீடு செய்யும் செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கம்போங் ஆயர் தாவாரில் கிராம விவேக மையத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணிப்புக்கு உண்டாகும் செலவை ஈடுசெய்யும் விதமாக கிள்ளான், உலு சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களை மேம்பாட்டாளருக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமிருடின் கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி இந்த விளையாட்டரங்கத் திட்டம் குறித்து பேசிய அவர், இந்த திட்டம் அரசாங்க-தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுவதால் மாநில அரசின் நிதி இதற்கு பயன்படுத்தப்படாது எனக் கூறியிருந்தார்.


Pengarang :