ECONOMYMEDIA STATEMENT

காப்புறுதி இழப்பீடு பெற மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக பொய்ப் புகார் அளித்த பாதுகாவலர் கைது

குவாந்தான், மே 13– காப்புறுதி இழப்பீடு பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக கதையை ஜோடித்த பாதுகாவலர் போலீஸ் பிடியில் வசமாகச் சிக்கினார்.

கெந்திங் ஹைலண்ட்ஸ், கெந்திங் பெர்மாயில் உள்ள கடை ஒன்றின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டதாக 33 வயதுடைய அந்த ஆடவர் கடந்த புதன் கிழமை போலீசில் புகார் செய்திருந்ததாக பெந்தோங் மாவட்ட போலீஸ தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைஹான் முகமது கஹார் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த பாதுகாவலரிடம் கடந்த சனிக்கிழமை தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்த போது அவரின் விளக்கத்தில் முரண்பாடு காணப்பட்டதை தாங்கள் கண்டறிந்ததாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள இரகசிய கண்காணிப்புக் கேமராக்களை சோதனையிட்ட போது அத்தகைய திருட்டுச் எதுவும் சம்பவம் நிகழவில்லை என்பது தெரிய வந்தது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அந்த மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் இருந்ததோடு பல மாதங்களாக தவணைப் பணமும் செலுத்தப்படாததால் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறும் நோக்கில் அவ்வாடவர் பொய்ப் புகாரை அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட அந்த ஆடவருக்கு எதிராக புகார் செய்த போலீசார் பொய்ப் புகார் அளித்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Pengarang :