ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நேற்று வரை நாடு முழுவதும் 14 வெப்ப பக்கவாதச் சம்பவங்கள் பதிவு

கோத்தா பாரு, மே 13- அதிக உஷ்ணம் காரணமாக 14 வெப்ப பக்கவாதச் சம்பவங்களை சுகாதார அமைச்சு நேற்று வரை பதிவு செய்துள்ளது.

வரும் ஆகஸ்டு மாதம் வரை வெப்ப வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப் படும் நிலையில் இத்தகைய வெப்ப பக்கவாதச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்குரிய சாத்தியம் உள்ளதாக சுகாதார துணை அமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சுவானி கூறினார்.

நேற்று வரை 14 வெப்ப பக்கவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. நிலைமையைச் சமாளிக்கும் ஆற்றலை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொண்டுள்ளன என்று அவர் சொன்னார்.

நேற்று வரை கிளந்தான் மாநிலத்தில் ஆறு வெப்ப பக்கவாதச் சம்பவங்களும் சரவாவில் ஐந்து சம்பவங்களும் சபாவில் மூன்று சம்பவங்களும் பதிவானதாக கூறிய அவர், பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் அதாவது ஏழு பேர் பெரியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜா பெரம்புவான் ஜைனாப்  மருத்துவமனை  மற்றும் குபாங் கிரியான் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஏற்பாட்டில் இங்கு இன்று நடைபெற்ற 4வது இண்டர்மீடியேட் எலக்ரோகார்டியோகிராம் மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த வெப்பத் தாக்குதலுக்கு ஆளான 14 பேரில் 13 குணமடைந்து  வீடு திரும்பிய வேளையில் கிளந்தானைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மட்டும் உயிரிழந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நீடித்து வரும் இந்த வெப்ப பக்கவாதப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :