ECONOMYMEDIA STATEMENT

 சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக உலகின் மிகப்பெரிய ஈயக்கப்பலை நிர்மாணிக்க சிலாங்கூர் திட்டம்

சிப்பாங், மே 21- சிலாங்கூரில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய ஈயக்கப்பலை நிர்மாணிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டுள்ளது.

டிங்கில் நகரில் சுமார் ஒரு கோடி வெள்ளி செலவில் இந்த ஈயக்கப்பலை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்காக தாங்கள் காத்திருப்பதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

மாநிலத்தில் குறிப்பாக தஞ்சோங் காராங், கோல சிலாங்கூர் போன்ற கடலோர பகுதிகளில் அதிகமான சுற்றுலா மையங்களை நிர்மாணிப்பதற்கான திட்டத்தையும் தாங்கள் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் மலேசியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெரிய ஈயக்கப்பலை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள புத்ரா ஜெயா ஐ.ஓ.ஐ. பேரங்காடியில் ஹோப் ஆன்-ஹோப் ஆஃப் எனும் கூரையில்லா சுற்றுலா பஸ் சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, கோல சிலாங்கூர், தாமான் ஆலமில் காண்டா மரக்காடு அடிப்படையிலான 350 தங்கும் குடில்களை அமைப்பதற்கான திட்டத்தையும் தாங்கள் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பூலாவ் கித்தாமில் உள்ளதைப் போல் சூழியல் சுற்றுலா மற்றும் வேளாண் சுற்றுலாவை மேம்படுத்துவது நமது முதன்மை நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தின் படி சுங்கை சொங்காக்  வனப்பகுதியில் ஹோட்டல் ஒன்றையும் நிர்மாணிக்கவுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :