ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பகடிவதை சம்பவம் தொடர்பில் ஒன்பது மாணவர்கள் கைது- பினாங்கு போலீஸ் தலைவர் தகவல்

ஜோர்ஜ் டவுன், 21- பட்டர்வொர்த் நகரில் உள்ள இடைநிலை பள்ளி ஒன்றில் அண்மையில் நிகழ்ந்த இரு கைகலப்பு சம்பவங்கள் தொடர்பில் ஒன்பது மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பட்டர்வொர்த் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் எட்டு மாணவர்களும் பள்ளி படிப்பை கைவிட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட ஒரே பள்ளியில் நிகழ்ந்த இரு கைகலப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக ஒன்பது பேரை நாங்கள் தடுத்து வைத்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகிறேன் என அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரணை அதிகாரி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறார். அவர்கள் அனைவரும் குறைந்த வயதுடைய பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை ஜாமீனில் விடுவிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.

காயம் விளைவிப்பதற்காக குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவு மற்றும் வன்செயலில் ஈடுபட்டதற்காக அதே சட்டத்தின் 147 வது பிரிவின் கீழ் இவ்விரு கைகலப்புச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

ஒரே பள்ளியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மாணவர்களை உட்படுத்திய இரு கைலப்புச் சம்பவங்கள் சித்தரிக்கும் இரு காணொளிகள் சமூக ஊடகங்கள் பரவலாகப் பகிரப்பட்டன.

பள்ளியின் கழிப்பறையில் ஒரு மாணவரை சக மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் 32 விநாடி காணொளியும் அதில் ஒன்றாகும்.


Pengarang :