ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பொது சொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுப்பதில் பொது மக்களின் உதவி தேவை- கவுன்சிலர் ராமு வேண்டுகோள்

ஷா ஆலம், மே 21- பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் பொறுப்பற்றத் தரப்பினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதில் பொது மக்களின் உதவி தங்களுக்கு மிகவும் தேவைப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்  ராமு நடராஜன் கூறினார்.

தாமான்களில் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள குப்பைத் தொட்டிகள், விளையாடு மைதானங்கள் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு குடியிருப்பாளர்களுக்கும் உள்ளது என அவர் சொன்னார்.

அண்மையில் தாமான் ஸ்ரீ மூடா வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக தருவிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் பொறுப்பற்ற நபர்களால் எரியூட்டப்பட்டும் சக்கரங்கள் உடைக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய செயல்களால் அரசாங்கத்திற்கு இழப்பும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடையூறும் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மைக்கு பொறுப்பேற்றுள்ள கும்பலான் டாருள் ஏசான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தலா 900 வெள்ளி மதிப்புள்ள 24 குப்பைத் தொட்டிகளை இந்த குடியிருப்பு பகுதிக்கு வழங்கியிருந்தது. எனினும், சிறிது நாட்களில் அவற்றில் இரு குப்பைத் தொட்டிகள் பொறுப்பற்ற நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை தாம் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி அவர் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ராமு சொன்னார்.


Pengarang :