ECONOMYMEDIA STATEMENT

புகார் கிடைத்த 24 மணி  நேரத்தில் பெட்டாலிங், கிள்ளானில் சாலைகளை இன்ப்ராசெல் சீரமைத்தது

ஷா ஆலம், மே 26- ட்விட்டர் வாயிலாக புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் உள்ள பழுதடைந்த சாலைகளை இன்ப்ராசெல் சென். பெர்ஹாட் நிறுவனம் சீரமைத்தது.

கம்போங் பாரு சுங்கை பூலோ ஜாலான் இண்டஸ்ட்ரி 9 மற்றும் ஜாலான் டுசுன் காப்பார் ஆகியவையே அவ்விரு சாலைகளாகும் என அந்த சாலை பராமரிப்பு நிறுவனம் கூறியது.

மேலும் ஷா ஆலம், டி.டி.டி.ஐ. ஜாலான் மோன்போர்ட்டில் கால்வாய் மற்றும் கழிவுநீர் முறையை சீரமைப்பு மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டத்தின் ஜாலான் லாமா கோல சிலாங்கூரில் சாலை மறுசீரமைப்பு ஆகிய பணிகள் கடந்த 23ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டது.

நேற்று வரை இவ்விரு இடங்களிலும் 30 விழுக்காட்டு பணிகள் முற்றுப் பெற்றுள்ளதாகவும் ஜூன் மாதவாக்கில் அவை முழுமை பெறும் என்றும் அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தது.

ட்விட்டர் வாயிலாக பொதுமக்கள் இன்பரா செல் நிறுவனத்திடம் அளிக்கும் புகார்கள் உடனடியாக கவனிக்கப்பட்டு 24 மணி  நேரத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியது.

மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதற்கான கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு துறை அமைச்சிடமிருந்து மாநில அரசு கூடுதலாக 20 லட்சம் வெள்ளியைப் பெற்றுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே மாதம் 13ஆம் தேதி கூறியிருந்தார்.

இந்த நிதியின் வாயிலாக பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :