ECONOMYPENDIDIKAN

ஆராய்ச்சி, புத்தாக்க பணிகளுக்காக உயர் கல்விக்கூடங்களுக்கு வெ.30 லட்சம் மானியம்

உலு லங்காட், மே 29- மாநிலத்தின் மேம்பாட்டு கொள்கை மற்றும் வியூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 30 லட்சம் வெள்ளி நிதியில் சிலாங்கூர் ஆராய்ச்சி மானியத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயர்கல்வி கூட மாணவர்களுக்கு ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த மானியத் திட்டம் உருவாக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான நான்கு முக்கிய அம்சங்களை இந்த ஆராய்ச்சித் திட்டம் அடிப்படையாக கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, மக்களின் சுபிட்சத்தை பேணுவது, நீடித்த வளர்ச்சியை உந்தச் செய்வது, நிர்வாகத் திறனை அதிகரிப்பது ஆகியவையே அந்த நான்கு முக்கிய அம்சங்களாகும் என அவர் தெளிவுபடுத்தினார்.

அதோடு மட்டுமின்றி, விவேக மாநில இலக்கின் உயிர்நாடியாக விளங்கும்  ஆராய்ச்சித் துறையில் மாணவர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதும்   இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டு மந்திரி  புசார் கிண்ண பேச்சுப்போட்டியை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வடிவமைக்கும் முதலாவது சிலாங்கூர் திட்டத்திற்கேற்பவும் நோக்கத்திற்கேற்பவும்  இந்த ஆராய்ச்சித் திட்டம் அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.


Pengarang :