ECONOMYMEDIA STATEMENT

உயர்கல்விக்கூட கல்விக் கட்டண உதவித் திட்டத்திற்கு மாநில அரசு வெ.40 லட்சம் ஒதுக்கீடு

உலு லங்காட், மே 29- உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான அடிப்படை கல்விக் கட்டண உதவித் திட்டத்திற்கு (பாயு) சிலாங்கூர் அரசு 40 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 40,000 மாணவர்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான உயர்கல்விக் கூடங்கள் குறிப்பாக  சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் (குயிஸ்) ஆகியவற்றில் பயிலும் மாணவர்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அரசாங்கத்தின் உயரிய பரிவு மனப்பான்மையின் வெளிப்பாடாக விளங்கும் இந்த உதவித் திட்டம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழி முன்பு ஆண்டுக்கு ஒரு முறையாக இருந்த கல்விக் கட்டண உதவி இனி ஆண்டுக்கு இரு முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான மந்திரி புசார் கிண்ண பேச்சுப் போட்டியை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 மற்றும் நடுத்தர வருமானம் பெறும் எம்40 தரப்பினரின் சுமையைக் குறைப்பதை இலக்காக கொண்ட இத்திட்டத்தின் கீழ் நூலகம், ஆய்வுக்கூடம், தகவல் தொழில்நுட்ப மையம், சுகாதாரம், மாணவர் நடவடிக்கை ஆகியவற்றுக்கான அடிப்படை கட்டணங்களை மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது.


Pengarang :