MEDIA STATEMENTNATIONAL

அரசியல் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகக் கையாண்ட பேரரசர்

ஷா ஆலம், ஜூன் 2;- நான்கு பிரதமர்களுடன் சேர்ந்து நாட்டை ஆண்ட ஒரே பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அவர்கள் ஆவார்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளை “Langah Sheraton“ என்ற ஆட்சி கவிழ்ப்பு மேற்கொண்ட வர்க்கத்தை  கையாண்டவர் மட்டுமல்லாமல், இக்கட்டான கால கட்டத்தில், மிக சாதுரியமாக நாட்டை வழி நடத்திய பேரரசர் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்கள் கடந்த  2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று, பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு, பேரரசர் நாடாளுமன்ற உறுப்பினர்களை  அரண்மனைக்கு அழைத்து  அவர்களின்  ஆதரவையும்  கருத்துகளையும்  அறிந்தார்.

மார்ச் 1 அன்று பேரரசர் அவர்கள் பிஎன் தலைவர் டான் ஸ்ரீ முகிடின் யாசினைப் பிரதமராக நியமித்தார். ஆனால் 17 மாதங்களுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் அரசியல் பிரச்சனை எழுந்தது. டான் ஸ்ரீ முகிடின்  தனது  நாடாளுமன்ற  பெரும்பான்மையை  நிரூபிக்க முடியாததால்  டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்  ஒன்பதாவது பிரதமராகப் பேரரசரால் நியமிக்கப்பட்டார்.

ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்   நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று  ஆட்சி அமைக்கும்  பொழுது, மீண்டும்  எழுந்த பெரும்பான்மை  ஆதரவு  விவகாரத்தை  மலாய் அரசர்கள்  இசைவோடு   பேரரசர் நல்ல முறையில் தீர்த்து வைத்தார். ஒரு ஒற்றுமை அரசை நிறுவி  பத்தாவது பிரதமராக டத்தோ ஸ்ரீ  அன்வாரை நியமித்து,   சலசலப்புகளுக்கு  முடிவு கட்டி மக்கள் போற்றும் பேரரசர் ஆனார். நாட்டின்  நலம் காக்க  அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட  உத்தரவிட்டு ஒரு கூட்டாட்சிக்கும்  வித்திட்டவர் இன்றைய மாமன்னர்  என்று கூறினால் மிகையாகாது.

நாட்டின் தலைவராக இருந்து வரும் பேரரசர்  அவர்களின் ஆட்சி, எதிர்வரும் ஜனவரியில் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.


Pengarang :