NATIONAL

உள்நாட்டு அரிசி கிலோ வெ.2.60ஆக நிலை நிறுத்தப்படும்- அமைச்சர் முகமது சாபு உத்தரவாதம்

ஷா ஆலம், ஜூன் 7- உள்நாட்டு அரிசியின் விலை உயர்வு காணவில்லை.
அது கிலோ ஒன்றுக்கு வெ.2.60ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

முன்பு விலையேற்றம் கண்டுள்ளதாகக்  கூறப்பட்டது வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் உயர் ரக அரிசியாகும் என்று உணவு
உத்தரவாதத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.

அரிசியின் விலை 5 விழுக்காடு உயர்ந்து விட்டதாகத் தற்போது பரபரப்பாகப்
பேசப்படுகிறது. வசதியானவர்கள் உண்ணக்கூடிய உயர் ரக இறக்குமதி
அரியே விலையேற்ற கண்டுள்ளது என்பதை இங்கு வலியுறுத்த
விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

அதே சமயம் பொது மக்களுக்கு, அதாவது மலேசியர்களுக்குக் கிலோ
வெ.2.60 என்ற விலையில் மட்டுமே அரிசி விற்கப்படுகிறது என்று
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.

அனைத்துலக உணவு பாதுகாப்பு குறியிட்டில் மலேசியாவின் இடத்தை
மேலும் மேம்படுத்துவதற்கு உணவு உத்தரவாத அமைச்சு எடுத்து வரும்
நடவடிக்கைகள் குறித்து சண்டகான் உறுப்பினர் விவியன் வோங் ஷிர் யீ
எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

உள்நாட்டு அரசி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு பெரிய
அளவிலான விவேக வேளாண் திட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகளை
அமைச்சு மேற்கொண்டு வருவதாக முகமது சாபு தெரிவித்தார்.

தற்போது பெரும்பாலும் முதியவர்களே விவசாயத் தொழிலில் ஈடுபட்டு
வருகின்றனர். பெரிய அளவில் நவீன தொழில்நுட்பத்தில் விவசாயத்தை
மேற்கொள்வதன் மூலம் இத்துறையில் இளையோரின் பங்கேற்பையும்
அதிகரிக்க முடியும். குறிப்பாக கெடா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளைஞர்கள் டிரோன் சாதனங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.


Pengarang :