ECONOMYMEDIA STATEMENT

இல்லாத காரை இணையம் வழி வாங்கியப் பெண் 132,000 வெள்ளியை இழந்தார்

ஈப்போ, ஜூன் 8- இல்லாத காரை இணையம் மூலம் வாங்க விரும்பிய பெண்மணி ஒருவர் அடையாளம் தெரியாத நபரிடம் 132,860 வெள்ளியை இழந்தார்.

பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை தொடர்பான விளம்பரத்தை பேஸ்புக் பதிவில் கண்ட அந்த பெண் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டதாக பேராக் மாநில  போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது யூஸ் ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

பின்னர் வாட்ஸ்அப் எனும் புலனம் வாயிலாக அந்தப்  பெண்ணை தொடர்பு கொண்ட அவ்வாடவர் தம்மை கார் விற்பனையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு அப்பெண்ணுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அடையாளக் கார்டின் படத்தையும் அனுப்பியுள்ளார் என்று அவர் சொன்னார்.

அதன் பின்னர் அந்த சந்தேகப் பேர்வழி வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்து காருக்கான கட்டணத்தை அந்த வங்கியில் செலுத்தும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த ஆடவர் கொடுத்த ஆறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் 132,860 வெள்ளியை அந்த பெண் சேர்த்துள்ளார். சொந்தப் பணம் கரைந்து போக நண்பனிடம் பணத்தை கடன் பெற அப்பெண் முயன்றுள்ளார். அந்த நண்பர் விடுத்த எச்சரிக்கை க்குப் பின்னரே அவர் சுதாரித்துக் கொண்டதாகவும், அப்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் என முகமது யூஸ்ரி தெரிவித்தார்.

அந்த பெண் நேற்று தன் தந்தையுடன் இங்குள்ள போலீஸ் நிலையம் வந்து புகார் செய்ததாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின்  கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.


Pengarang :