NATIONAL

தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கான பேருந்து கட்டணத்திற்கு அரசு மானியம்  வழங்குதல்  நிகழ்வு – YB வீ. கணபதிராவ்

ஷா ஆலம், ஜூன் 9: நேற்று YB வீ. கணபதிராவ் அவர்களின் தலைமையில் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகத்தில்  சிலாங்கூர் மாநில அரசின்  தமிழ் பள்ளிகளுக்கான பேருந்து கட்டண   மானிய  உதவி ஒப்படைப்பு  நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேருந்து கட்டண மானியம்  உதவி திட்டம் என்பது மலேசியாவில், சிலாங்கூரில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு மட்டுமே  மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு உதவி திட்டமாகும். இத்திட்டம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் களின்  பொருளாதார  சுமையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி இந்திய மாணவர்களிடம் கல்வியை இடையில் கைவிடும் நிலையை தடுக்கும் நோக்கம் கொண்டது.

பள்ளி பேருந்து கட்டண  உதவி திட்டம் என்பது ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும். இது பரிவுமிக்க  அரசாங்க நிலைக்குழுவின் கீழ் உள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கான மாதாந்திர செலவுக்கான சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என YB வீ. கணபதிராவ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசின் பரிவுமிக்க  நிலைக்குழு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள தமிழ் பள்ளிகளுக்காக 2023ஆம் ஆண்டுக்கான பேருந்துக் கட்டண மானிய நன்கொடை திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள 97 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 3,594 மாணவர்களுக்கு RM1,078,200.00 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமில்லாமல், பள்ளி நிர்வாகம் வழங்கப்படும் மானியத்திற்கான செலவின அறிக்கையை 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என YB வீ. கணபதிராவ் வலியுறுத்தினார். மேலும், இந்த திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் தொடரும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :