ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தொழில் கல்விக்கு முன்னுரிமை அளிப்பீர்- இந்திய சமூகத்திற்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூன் 11– தங்கள் பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதில் ஏட்டுக் கல்விக்கு தரும் அதே முக்கியத்துவத்தை தொழில் கல்விக்கும் வழங்க வேண்டும் என இந்திய சமூகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புத்தாக்க நடவடிக்கைகள் காரணமாக உலகம் முழுவதும் தொழில்நுட்ப மற்றும் திறன் சார்ந்த துறைகளில் ஆள்பலத் தேவை அதிகரித்து வருவதால் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் இந்திய சமூகத்தின் மத்தியில் சிந்தை மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

மலேசிய இந்திய பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற மலேசியா மடாணி- இந்திய அரசியல் தலைமையின் முன்நகர்வு எனும் ஆய்வரங்கில் உரையாற்றிய இந்தியத் தலைவர்கள் இந்த கருத்தை முன்வைத்தனர்.

மெட்ரிகுலேஷன் கல்விக்கு தேசிய முன்னணி அரசு வழங்கிய அதே 2,400 இடங்களை ஒற்றுமை அரசாங்கம் வழங்குமா என ஆய்வரங்கில் கலந்து கொண்டவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அத்தலைவர்கள் இவ்வாறு கூறினர்.

இந்த ஆய்வரங்கில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன், கிள்ளான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவருமான சார்ல்ஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் இந்திய சமூகத்திற்கு மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

இந்திய சமூகம் மருத்துவம், வழக்கறிஞர் போன்ற வழக்கமான துறைகளில் கவனம்  செலுத்தாமல் அதிக வருமானம் ஈட்டித் தரக்கூடிய   தொழில் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மின்சாதனங்கள் குழாய், குளிர்சாதனம் போன்ற பழுதுபார்ப்பு துறைகளில் திறன் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது தவிர, உயர் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளாக விளங்கும் டிரோன் சாதனத்தை கையாள்வது மற்றும்  இ.வி. எனப்படும் மின்சார வாகன தொழில்நுட்ப துறைகளில் அதிகமானோர் தேவைப் படுகின்றனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


Pengarang :