EKSKLUSIFMEDIA STATEMENT

சிலாங்கூரில் 50 தொகுதிகளை வெல்லும் ஒற்றுமை அரசின் இலக்கு சாத்தியமானதே- மந்திரி புசார் கூறுகிறார்

 கோலாலம்பூர், ஜூன் 24- விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில்  குறைந்த பட்சம் 50 தொகுதிகளை வெல்லும் ஒற்றுமை அரசின் இலக்கு யதார்த்தமானது என்பதோடு சாத்தியமானதும் கூட என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் ஆகிய இரு கூட்டணிகளின் ஒருங்கிணைந்த ஆற்றலின் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரில் மூன்றில் இரு மடங்கு தொகுதிகளை வெல்வதுதான் நமது இலக்காகும். ஹராப்பான் மற்றும் பாரிசான் வாக்குகள் ஒன்றிணையும் பட்சத்தில் இதனை நாம் அடைவது சாத்தியமே என்றார் அவர்.

ஹராப்பான் மற்றும் பாரிசான் அடிமட்ட உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கான தருணம் இது. சிலாங்கூரில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு சூப்பர் கூட்டணிக்கு (ஒற்றுமை அரசாங்கம்) வெற்றியைத் தேடித் தர நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள செராஸ், பண்டார் துன் ஹூசேன் ஓன் பள்ளிவாசலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மொத்தம் 56 தொகுதிகளைக் கொண்ட சிலாங்கூரில் குறைந்த பட்சம் 50 இடங்களை வெல்ல பக்கத்தான்-பாரிசான் கூட்டணி நிர்ணயித்துள்ள இலக்கு சாத்தியமற்றது என அரசியல் பார்வையாளர்களும் எதிர்க்கட்சியினரும் கூறியுள்ளது குறித்து அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.

மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் சிலாங்கூர் மாநிலத்தின் 14வது சட்டமன்றம் நேற்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.


Pengarang :