ALAM SEKITAR & CUACAECONOMY

பத்தாண்டுகளில் 250 ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீர்வு – கணபதி ராவ்

ஷா ஆலம், ஜூன் 23- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளில் 250 ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் கூறினார்.

இந்த முன்னெடுப்பின் வாயிலாக அரசாங்க நிலங்களில் மட்டுமின்றி தனியார் நிலங்களில் குறிப்பாக தோட்டப்புறங்களில் அமைந்துள்ள  ஆலயங்களும் சொந்த நிலத்தை பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

 

இது மிகப்பெரிய சாதனை என வர்ணித்த கணபதி ராவ், நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு ஆலய நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றார் அவர்.

 

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜந்து ஆலயங்களுக்கு மட்டுமே நில உரிமை பெறப்பட்டதாக நான் அறிகிறேன். 2008 ஆம் ஆண்டு டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆட்சிக் குழுவில் இடம் பெற்ற பிறகு 15 ஆலயங்கள் நில உரிமையைப் பெற்றுள்ளன. அதன் பிறகு நான் ஆட்சிக்குழு  உறுப்பினராக பொறுப்பேற்ற பத்தாண்டு காலத்தில் 25  ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

இன்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற  இந்து ஆலயங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட நிதியளிப்பு நிகழ்வில் 63 ஆலயங்களுக்கு 810,000 வெள்ளி வழங்கப்பட்டது.

 

டாக்டர் சேவியர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த போது 10 லட்சம் வெள்ளியுடன் தொடங்கப்பட்ட இந்த ஆலய மானியம் இவ்வாண்டில் 23 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக கணபதி ராவ் சொன்னார்.

 

இவ்வாண்டிற்கான மானியத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் 905,00 வெள்ளியும் இன்றைய நிகழ்வில் 810,000 வெள்ளியும் ஆலயங்களுக்கு வழங்கப் பட்டுள்ள நிலையில் எஞ்சிய தொகையில் 515,000 வெள்ளி விரைவில் நடைபெற இருக்கும் நான்காம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வின்போது 53 ஆலயங்களிடம் ஒப்படைக்கப்படும்  என்றார் அவர்.


Pengarang :