ALAM SEKITAR & CUACAECONOMYTOURISM

சிலாங்கூரில் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பின் வழி வேளாண் சுற்றுலா வளர்ச்சி பெறும்- ஆட்சிக்குழு உறுப்பினர் நம்பிக்கை

கோல சிலாங்கூர், ஜூன் 29– சிலாங்கூர் மாநிலத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேளாண் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் வேளாண் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

தனித்துவத்தையும் வசீகரத்தையும் கொண்டுள்ள காரணத்தால் சூழியல் சுற்றுலா தவிர்த்து வேளாண் சுற்றுலாவும் அதிக சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக அவர்  சொன்னார்.

சிலாங்கூர் ஃபரூட் வேலியை உதாரணமாகக் கூறலாம். பல்வேறு பயிர்கள் மற்றும் பழவகைகளை கொண்ட தனித்துவமிக்க விவசாயப் பகுதியாக விளங்கும் இது சுற்றுப் பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமாகவும் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

 சிலாங்கூர் ஃப்ரூட் வேலியில் டூரிசம் சிலாங்கூருடன் இணைந்து  தங்கும் விடுதியை (ஹோட்டல்) அமைப்பது தொடர்பில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள பெஸ்தாரி ஜெயா, சிலாங்கூர் ஃப்ரூட் வேலியில் நேற்று நடைபெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் பலியிடும் நிகழ்வுக்காக மாடுகளை பூர்வக்குடியினருக்கு வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :