EKSKLUSIFEKSKLUSIFELMEDIA STATEMENT

தொண்டர்கள் கடுமையாக உழைத்தால்  56-ல் 50-ஐ கைப்பற்றலாம்  மந்திரி புசார் திட்டவட்டம்

செய்தி சு. சுப்பையா.

கோலசிலாங்கூர். ஜூலை.12-  சிலாங்கூரில் 56 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 56 தொகுதிகளிலும் நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி தொண்டர்கள் இரவு பகல் பாராமல் வெற்றியை நோக்கி கடுமையாக உழைத்தால் 50 தொகுதிகளை கைப்பற்றி ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கலாம். இது சாத்தியம் என்று அவர் நேற்று கோல சிலாங்கூரில் உள்ள புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தொகுதியின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது திட்டவட்டமாக கூறினார்.
56 சட்டமன்ற தொகுதிகளில் 33 தொகுதிகளின் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். மேலும்  7 தொகுதிகளில் 1,000 முதல் 2,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
கடந்த காலத்தை விட இந்த தேர்தலில் பலம் வாய்ந்த நம்பிக்கை கூட்டணியும் தேர்தல் களத்தில் பழுத்த அனுபவம் கொண்ட தேசிய முன்னணியும் களத்தில் ஒன்று இணைந்து இருப்பதால் இந்த தேர்தலில் நாம் குறைந்தது 50 தொகுதிகளை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று பலத்த கைதட்டலுக்கு இடையே கூறினார்.
நாட்டில் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் தான் பலம் வாய்ந்த தேர்தல் இயந்திரத்தை கொண்டுள்ளது. இதை நாம் நெஞ்சில் நிறுத்தி களத்தில் கடுமையாக பாடு பட்டால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறினார்.
இம்முறை நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை. கடந்த 5 ஆண்டு காலத்தில் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் குறை கேட்டு அறிந்து தீர்வு கண்டுள்ளோம். சிலாங்கூர் மக்கள் நல்ல விபரம் தெரிந்தவர்கள். எதிர்க் கட்சிகள் கூறும் அவதூறுகளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள்.பாஸ் கட்சி மற்றும் பெர்சத்து வேட்பாளர்களை நிராகரிப்பார்கள்.
நமது தேர்தல் இயந்திரம் வாக்காளர்களை சென்று சந்திக்க வேண்டும். இதே போல் முகநூல், திக் தோக்களில் நமது பிரச்சாரத்தை தொடர வேண்டும்.
நாட்டிலேயே சிலாங்கூர் மாநிலம் தான் மத்திய அரசுக்கு 25.5% வருமானத்தை கொடுத்துள்ளது. பாஸ் கட்சியின் கட்டு பாட்டில் உள்ள கெடா, கிளாந்தான் திரங்கானு ஆகிய மாநிலங்கள் சிலாங்கூரை விட எல்லா வகையிலும் பின்தங்கியுள்ளன.
இதே போல் மாநிலத்தின் கையிருப்பும் 3.4பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. அஸ்மின் ஆட்சி காலத்தை விட பன் மடங்கு உயர்ந்துள்ளது.
மாநில மக்களின் நலனுக்காக 2.3 பில்லியன் ரிங்கிட் செலவிடப் பட்டுள்ளது. இது அஸ்மின் காலத்தை விட பன் மடங்கு உயர்ந்துள்ளது என்பதை பெருமித்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கோவிட் தடுப்பூசி வாங்கி மாநில மக்களை காப்பாற்ற களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்ட ஒரே மாநிலம் சிலாங்கூர்.
அதே காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான உணவு பொருக்களையும் வாரி வழங்கி மாநிலங்களில் முதன்மையான மாநிலம் சிலாங்கூர்.
இதே போல் முதலீட்டாளர்களை கவர்ந்து இழுப்பதிலும் சிலாங்கூர் தான் முன்னணி வகிக்கிறது.
அஸ்மின் காலத்தில் 600 அல்லது 700 கோடி ரிங்கிட் தான் முதலீடாக கவரப்பட்டது. ஆனால் தற்போது 1600 முதல் அல்லது 1700 கோடி  ரிங்கிட் வரை முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளன. அஸ்மின் இதை தெரிந்துக் கொள்ள வேண்டும். சிலாங்கூர் பின் தங்கி விட்டது என்று அவதூறுகளை பரப்பக் கூடாது.
சிலாங்கூர் மக்களுக்கு முன்பு 33 திட்டங்கள் தான் இருந்தன . ஆனால் இன்று 46 திட்டங்கள் வெற்றி கரமாக அமல் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சிலாங்கூருக்கு வெளியே உள்ள மக்கள் சிலாங்கூர் மக்களுக்கு கிடைக்கும் மகத்தான வாய்ப்புக்களை கண்டு பொறாமை படும் அளவிற்கு நாம் சிலாங்கூர் மக்களுக்கு நற்சேவை யாற்றி கொண்டிருக்கிறோம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கோல சிலாங்கூர் தொகுதியில் உள்ள புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தேர்தல் இயந்திர பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது  கூறினார்
கோல சிலாங்கூர் மக்கள் நீதிக் கட்சியின் தொகுதித் தலைவர் தீபன் சுப்ரமணியம் பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் சுமார் 1000  வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.
கோல சிலாங்கூர் தொகுதியின் அம்னோ தலைவர்களும் திரளாக கலந்து கொண்டு தேர்தலுக்கு பின் ஒற்றுமை அரசு மலர வழி காட்டியுள்ளனர்.

Pengarang :