ECONOMYMEDIA STATEMENT

ஷா ஆலம் சரக்கு போக்குவரத்து மையத்தின் வழி 2028 இல்  5,000 வேலை வாய்ப்புகள் உருவாகும்

ஷா ஆலம், ஜூலை 18 –   சுமார் 200 கோடி வெள்ளி முதலீட்டில் இங்குள்ள செக்சன் 16 இல்  உருவாக்கப்படும் ஷா ஆலம் இன்டர்நேஷனல் லோஜிஸ்டிக்ஸ் ஹாப் எனும் அனைத்துலக சரக்கு போக்குவரத்து மையம் வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் 5,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளோபல் விஷன் லாஜிஸ்டிக்ஸ் சென். பெர்ஹாட் (ஜி.வி.எல்.) நிறுவனத்திற்கு  சொந்தமான சரக்கு போக்குவரத்து மையம் 28.73 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்படும் என்றும் அதன் முதல் கட்டப் பணிகள் வரும் 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப் படுவதாக மந்திரி புசார் கூறினார்.

சிலாங்கூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த மையத்தின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். முதல் கட்டமாக இம்மையத்தின் வாயிலாக 3,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின்  ஷாரி தெரிவித்தார்.

நேற்று இங்கு அனைத்துலக சரக்கு மையத் திட்டத்தை தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த மையத்தின் முதல் கட்டத்தில் நான்கு மாடிக் கிடங்கு வளாகம், நான்கு  மாடி கார் பார்க்கிங் வசதி மற்றும் ஒரு மாடி அலுவலகக் கட்டிடம், சோதனை மற்றும் சான்றிதழ் மையம் ஆகியவை அமையப் பெற்றிருக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த மையத்தின் முதல் கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக  65 கோடியே 36 லட்சம் வெள்ளி மதிப்பிலான  குத்தகையை ஐ.ஜே.எம். நிறுவனம்  பெற்றுள்ளதாக பெர்னாமா முன்பு தெரிவித்தது.

ஆசியானின் மிகப்பெரிய மற்றும் நாட்டின் முதலாவது சான்றளிக்கப்பட்ட பசுமை  மையமாக இது விளங்கும்.


Pengarang :