ECONOMYMEDIA STATEMENTSAINS & INOVASI

 கோத்தா புத்ரி தொழிலியல் பூங்கா வழி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்- மந்திரி புசார் கூறுகிறார்

கோம்பாக், ஜூலை 25- இங்குள்ள கோத்தா புத்ரியில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) உருவாக்கி வரும் பசுமை தொழிலியல் பூங்கா (க்ரிப்) 5,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் வட்டார சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் அதேவேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை சிலாங்கூர் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் உதவும் என்று அவர் சொன்னார்.

மைய தொழிலியல் பூங்கா கோட்பாட்டின் கீழ் 150.8 ஹெக்டர் பரப்பளவில்  உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் நிகர மேம்பாட்டு மதிப்பு 200 கோடி வெள்ளியாகும் என  அவர் தெரிவித்தார்.

இது ஒரு நேர்மறையான வளர்ச்சிக்கான அறிகுறியாக இத்திட்டம் விளங்குவதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் உதவுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

முறையான ஒழுங்கமைப்பு மற்றும் சூழியல் முறையைக் கொண்டுள்ள பி.கே.என்.எஸ். இந்த தொழிலியல் நகரில் வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் உருவாக்கியுள்ளது என்று இன்று இந்த திட்டத்தை தொடக்கி  வைத்த போது அவர் கூறினார்.

இதனிடையே, இந்த பூங்காவை ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகவும் ட்ரோன் தயாரிப்பு இடமாகவும் உருவாக்கும் திட்டத்தை இன்வெஸ்ட் சிலாங்கூர் அமைப்புடன் பி.கே.என்.எஸ். கூட்டாக மேற்கொள்ளும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.


Pengarang :