ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENT

சிலாங்கூரில் 147 வேட்பாளர்கள்- பக்கத்தான் சார்பில் 44 பேர் போட்டி

ஷா ஆலம், ஜூலை 30- வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் 147 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் 44 பேர் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் 12 பேர் பாரிசான்  நேஷனல் சார்பில் போட்டியிடும் வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் 56 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இவை தவிர, மலேசிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி (மூடா) நான்கு இடங்களிலும்  பி.எஸ்.எம். எனப்படும் மலேசிய சோசலிசக் கட்சி நான்கு இடங்களிலும் பார்ட்டி ராக்யாட் மலேசியா (பி.ஆர்.எம்.) ஆறு  இடங்களிலும் பார்ட்டி உத்தாமா ராக்யாட் கட்சி ஒரு இடத்திலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இது போக, சுயேச்சைகள் பத்து வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்த வேட்பாளர்களில் 27 பெண்கள் மற்றும் 120 ஆண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 23 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்களாவர். புக்கிட் அந்தாரா பங்சா தொகுதியில் மூடா கட்சியின் சார்பில் போட்டியிடும் மெலினி திங் யீ ஹின் மிகவும் குறைந்த வயதுடைய  வேட்பாளராக கருதப்படுகிறார். அதே சமயம் செலாட் கிள்ளான் தொகுதியில் களம் இறங்கியுள்ள டத்தோ அப்துல் ரஷிட் அசாரி வயது முதிர்ந்த வராவார்.

இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மிகவும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக உலு கிளாங் தொகுதி விளங்குகிறது. முன்னாள் மந்திரி புசாரும், பொருளாதார முன்னாள் அமைச்சருமான அஸ்மின்  அலியை முன்னாள் கோலா சிலாங்கூர்  புக்கிட்  மெலாவத்தி  சட்டமன்ற உறுப்பினர் ஜுவாரியா சூல்கிப்லி எதிர்த்து போட்டியிடுகிறார்.


Pengarang :