ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வேக வரம்பை மீறும் வாகனங்களுக்கு மீது சோதனை- முதல் நாளில் 8,718 குற்றப்பதிவுகள் வெளியீடு

கோலாலம்பூர், ஆக 23- வேக வரம்பை மீறும் வாகனங்களுக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் படை நேற்று முன்தினம் தொடங்கிய சோதனையில் 8,718 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த வேக வரம்பு சோதனையில் கார்களுக்கு அதிகமாக அதாவது 8,352 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்ட வேளையில் இக்குற்றத்திற்காக 44 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் சம்மன் வழங்கப்பட்டதாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் டத்தோ முகமது நஸ்ரி ஓமார் கூறினார்.

இவை தவிர, லோரி, பஸ் போன்ற வர்த்தக மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு 322 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேக வரம்பை மீறியது தொடர்பான கே170ஏ குற்ற அறிக்கைகள் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகளுக்கு அவர்களின் வானமோட்டும் லைசென்ல் உள்ள முகவரிக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேக வரம்பை மீறியது தொடர்பான அனைத்துக் குற்றங்களுக்கும் அபாரதம் செலுத்த முடியும் எனக் கூறிய அவர், இந்த அபராதத் தொகையை நாடு முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையக போக்குவரத்து பிரிவில் செலுத்தலாம் என்றார்.

“சம்மன் தேம்பாக் லாஜூ“ அல்லது “சம்மன் ஏக்கோர்“ எனப்படும் தபால் மூலம் சம்மன் அனுப்பும் நடவடிக்கையானது வாகனமோட்டிகள்  விதிமுறைகளைப் பின்பற்றி சாலையைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

இந்த நடவடிக்கையின் கீழ் போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை மீறும் வாகனங்களை படம் பிடித்து அதற்கான குற்றப்பதிவுகளை தபால் மூலம் சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு அனுப்புவர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :