EKSKLUSIFELMEDIA STATEMENT

சிம்பாங் ஜெராம், பூலாய் தொகுதிகளைத் தற்காத்துக் கொள்ள அமானா நம்பிக்கை

அலோர் காஜா, ஆக 23- விரைவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி மற்றும் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள பார்ட்டி அமானா நெகாரா (அமானா) நம்பிக்கை கொண்டுள்ளது.

அவ்விரு தொகுதிகளிலும் குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டில் அமானா கட்சி உதயமான சிம்பாங் ஜெராமில் அக்கட்சிக்கு உள்ள வலுவான ஆதரவின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாக அக்கட்சியின் உதவித் தலைவர் அட்லி ஜஹாரி கூறினார்.

அவ்விரு தொகுதிகளின் பிரதிநிதியான மறைந்த டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் ஆற்றிய சேவைகளை தொடரவும் தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அமானா கட்சியின் வலுவான அடித்தளமும் சலாவுடின் ஆயோப்பின் அளப்பரிய சேவைகளும் இவ்விரு தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்வதற்கான சாதகமான அம்சங்களாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமானா கட்சி உருவான இடம் சிம்பாங் ஜெராம் தொகுதி என்பது பலருக்கும் தெரியாது. உண்மையில்  இந்த சட்டமன்றத் தொகுதிதான் கட்சியின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டது என்பதோடு கட்சியின் வலுவான கோட்டையாகவும் திகழ்கிறது. ஆகவே, வரும் இடைத்தேர்தலில் இருவ்விரு தொகுதிகளையும் வெற்றி கொள்ள முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள டுரியான் துங்கால் தேசிய இடைநிலைப்பள்ளியில் பள்ளிகளில் தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை கலாசாரமாக்குவது தொடர்பான நிகழ்வைத்  தொடக்கி வைத்தப் பின்னர் துணைத் தற்காப்பு அமைச்சருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பூலாய் நாடாளுன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கடந்த ஜூலை 23ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இவ்விரு தொகுதிகளிலும் வரும் ஆகஸ்டு 26ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலும் செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தலும் நடைபெறவுள்ளது.


Pengarang :